இரண்டு முதல் ஐந்து வரையிலான நான்கு எனப்படும் ஐந்து திங்கள்கள்

 





வினை: பயிற்சி பெறுதல் (பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களாக)

களம்: பயிற்சிக்கு சென்ற பள்ளி,

செய்வினையாளர்கள்: அருள் ரூபன் (தமிழ்),

அழகுராஜ் (தமிழ்),

கார்த்திக் ராஜா (கணிதம்),

சந்துரு (அறிவியல்),

தர்மசீலன் (அறிவியல்),

சங்கர் (கணினி அறிவியல்).


     ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்திற்காக விடுமுறை விட்டதற்கான மறுநாள் மதியம் சுமார் ஒரு மணியளவில் மேலே கூறப்பட்ட மாந்தர்கள் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்ட பள்ளிக்கு கையில் ஒரு மொட்டை கடிதத்துடன் செல்கின்றனர். மொட்டை கடிதம் எனச் சொல்வதால் இதை வாசிக்கும் சிலர் கோபப்படலாம். அந்த கோபத்திற்கு எழுதக்கூடியவர் காரணமில்லை அந்த கடிதம் மட்டுமே காரணம். காரணமில்லை காரணம் என கதை விடாமல் காரணத்தை சொல்லி விடுகிறேன் இல்லையென்றால் இது பிராது ஆகிவிடும் என்பதை நான் அறிவேன். அந்த கடிதத்தில், மேலேயுள்ள மாந்தர்களின் பெயர்கள் தவறேதும் இல்லாமல் முகப்பெழுத்துடன் முழுமையாக இடம் பெற்றிருந்தது என்பது உண்மை. ஆனால், பயிற்சிக்கு செல்லும் மாந்தர்களுக்கு எந்தெந்த வகுப்பு என்னென்ன பாடங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்கிற விவரம் இல்லை. இந்த கடிதத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் சங்கர் மட்டுமே. பயிற்சிக்கு நான்கு மாதம் வரவேண்டும் என்கிற எந்தவொரு திட்டமும் இல்லாமல் வந்த சங்கர் இவர்களுடன் இணைந்து பெற்றதும் இழந்ததும் கதையளந்ததும் கதையடித்ததும் ஏராளம். இப்போது நேரடியாக கருப்பொருளுக்கு வருவோம். இரண்டாம் தேதி மதியம் அந்த கடிதம் குறித்த விசாரணை முடிந்தவுடன் உத்தேச கணக்கில் இரண்டரை மணியளவில் மதிய உணவை எடுத்துக் கொண்ட இவர்களில் சிலருக்கு உள்ளூர பயமும் சந்தேகமும் சோர்வும் கேள்வியும் ஏமாற்றமும் பலவாறு வந்தது. மேலே குறிப்பிட்ட உம்களுக்கான விடை அடுத்த நாளாவது கிடைக்குமா? எனப் பார்த்தால் அந்த முழு நாள் காத்திருப்புக்கு பின்னான நாளின் பிற்பாதியின் இறுதி மணிப்பொழுதுகளிலேயே கிடைக்கிறது. அந்த உம்களுக்கான விடைகளாக எல்லோருக்கும் வழிகாட்டி ஆசிரியர்கள் பள்ளி மூலம் ஒதுக்கப்படுகின்றனர். மேலும் காலை ஒன்பது மணிக்குள் பள்ளிக்குள் இருக்க வேண்டும் என்கிற விதியும் விதிக்கப்படுகிறது. அது சரியாக கடைபிடிக்கப்பட்டதா என்பதை அறிய மூன்றாவது நாளுடைய காலைப்பொழுதை கவனிப்பது அவசியம்.  அனைவராலும் சரியாக கடைபிடிக்கப்பட்ட அந்த விதியை மீறுவதற்கான சூழல் அழகுராஜ்க்கு வருகிறது. அந்த நாள் மட்டுமே அழகுராஜ் அந்த விதியை மீறிய முதல் மற்றும் கடைசி நாள்.  அழகுராஜ், கார்த்திக் ராஜாவைத்  தவிர்த்த ஏனையோர் அவ்வப்போது அந்த விதியை மீறுவது வெகு இயல்பு. அந்த விதியை முற்றிலும் மறுதலித்தவர்களாக சங்கர் மற்றும் அருள்ரூபனின் பெயர்களை மொழிவது சரியாக இருக்கும். 

     விதிகளைத் தாண்டிய வினையை நோக்கி நாம் வருவதே இந்த இடத்தில் உசிதம். வினைக்கான அடிப்படை மூலமே கடுமையான பயிற்சிகளே. பயிற்சிக்கான முன்திட்டங்களைப் பற்றிய குறிப்புகளைக் கவனிப்பதும் முக்கியம். ஏனென்றால் இங்கு வந்துள்ள மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டமும் திட்டமற்ற மொந்தை மனமும் உண்டு. அந்த பயிற்சி கடுமையானது என்று மேலே சொன்ன வார்த்தையைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்‌. ஏனென்றால் மேலேயுள்ள மாந்தர்கள் ஒவ்வொருவரும் புலம்பினாலும் கூட பயிற்சியை கற்கண்டை போல ருசித்துள்ளனர். இந்த இடத்தில் தேனைப் போன்ற மதுரமான இனிப்பு பதார்த்தத்தைக் கூறாமல் கற்கண்டை கூறுவதற்கு பின் ஒரு உள்ளர்த்தம் உண்டு.  அது என்ன என்பதை இந்த பதிவை வாசிக்கும் நண்பர்கள் கேட்கவில்லை என்றாலும் சொல்லக்கூடிய கடமை இதை எழுதுபவருக்கு உண்டு. அது என்ன கடமை என்றால் கற்கண்டு குறித்து எழுதுபவருடைய சிறுமூளையில் துடித்து விழுந்த சிந்தனையைச் சொல்வதே ஆகும். கற்கண்டு போன்ற நாட்கள் என்பதற்கான பொருளை இந்த இடத்தில் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. நீங்கள் பீடிகை போடாமல் விசயத்தைச் சொல்லு... எனச் சொல்வது எனக்கு கேட்டுவிட்டதால் சொல்ல வந்த செய்தியை எழுதி விடுகிறேன். வாசித்த பிற்பாடு இதற்கு தான் இவ்வளவு பீடிகை போட்டாயா? என நீங்கள் எழுதுபவரிடம் கேட்டால் அவருடைய பதில் எல்லாம் ஒரு ‘ஜீ'யினுடைய தாக்கம் தான் இது என்பதாகவே இருக்கும். அந்த ஜீ யாரென்பதை மேலேயுள்ள மாந்தர்களில் ஐந்து பேரும் இவர்களுள் அடக்கமில்லாத கௌரவ வேடம் தாங்கி கதைக்குள் பயணிக்கும் கதைமாந்தரான சசிகுமாரும் (வணிகவியல்) அறிவர். இந்த நொடியில் சொல்ல வந்த கற்கண்டு காரியம் என்னவென்றால், கற்கண்டு வாயில் போட்டு மெல்வதற்கு கொஞ்சம் அசௌகரியமானது. சில சமயம் மெல்லும் போது வாயைக் கிழித்துவிடும் அபாயமும் உண்டு. ஆனால் மென்று தின்றால் இனிக்கும். பயிற்சிக்கு சென்ற மாந்தர்களின் எண்பது நாட்களும் அப்படியானதே. கரடு முரடாக இருந்தாலும் இனிப்பானவை என்பதே அந்த நியதி. ஒரு சம்பவத்தை எழுதுவதில் இதை எழுதிக் கொண்டிருப்பவருக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால் சொல்ல வந்த விசயத்தை சொல்வதற்கு முன் சம்பந்தமில்லாத கற்கண்டு விசயங்களில் எல்லாம் தன்னுடைய சொற்களை அதிகமாக பயன்படுத்துவதே ஆகும். எனவே, இந்த இடத்தில் உங்களிடம் ஒரு கோரிக்கை விடுக்கப்படுகிறது. பொறுமையாக முழுமையாக வாசிக்கவும்.

      இப்போது வினையை நோக்கி வருவதற்கு செய்விப்பவர்கள் குறித்து செயல்படுபவர்கள் நிகழ்த்திய விவாதங்கள் கவனிக்க வேண்டியவை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள மாந்தர்களில் அதிகம் பாவப்பட்ட உயிர் அழகுராஜ் தான். தர்மசீலன் சந்துருவை வைத்து அழகுராஜ் மீது நிகழ்த்திய வன்முறையாக அந்த விவாதத்தின் தொடக்கத்தைக் காணலாம். சந்துரு ஒரு ஆசிரியரிடம் வணக்கம் கூறியதாகவும் அந்த ஆசிரியர் மறுதலையாக சந்துருவை பாவப்பட்டு பார்க்கும் ஏளனப்பார்வையை பார்த்ததாகவும் கூறியதோடு நில்லாமல் எதையும் விசாரிப்பதில் தீவிரம் காட்டாத தர்மசீலன் அந்த ஆசிரியர் எடுக்கும் பாடத்தை மட்டும் கவனமாக விசாரித்து அந்த ஆசிரியர் தான் அழகுராஜ்க்கு வழிகாட்டியாக வருவார் என்றும் அவன் அதிகம் கஷ்டப்படுவான் என்றும் நினைத்து அவனைப் பார்த்து சிரித்த சிரிப்பு அவனுக்கு தர்மசீலனால் இழைக்கப்பட்ட சாபம்.  இந்த இடத்தில் தர்மசீலன் செய்விக்கப்பட்ட விதத்தைக் கூறாமல் கடந்து சென்றால் அது தர்மமாகாது. தர்மசீலன் என்ற பெயர் அவரது வழிகாட்டியால் தர்மலிங்கம் என்றும் தர்மலிங்கம் காலப்போக்கில் அமிர்தலிங்கமாக மருவியதும் நிகழ்ந்த வரலாறு. இந்த நிகழ்ச்சி கொழுக்கட்டை கதையைப் போன்றதாகும். உங்களில் சிலருக்கு இந்த கொழுக்கட்டை கதை தெரிந்திருக்கலாம். இருந்தாலும் எனக்கு தெரியும் என்பதால் இப்போது சுருக்கமாக ஓரிரு வாக்கியங்களில் எழுதுகிறேன். ஒரு ஊரில் என்ற பழைமையான கதை சொல்லல் முறையில் தான் அந்த கதை தொடங்கும். ஒரு ஊரில் புதிதாக கல்யாணம் ஆன தம்பதிகள் இருந்தனர். விசேஷ பண்டிகை நாள் ஒன்றிற்காக புது மாப்பிள்ளை தனது மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு செல்கிறார். அவரோடு அவரது மனைவி வரவில்லை. தனியாக செல்லும் அவருக்கு மாமனார் வீட்டில் பலத்த வரவேற்பு. மாமியார் பலவித திண்பண்டங்கள் செய்து விழாவையும் விருந்தையும் பிரம்மாதப்படுத்திவிட்டார். அந்த மாப்பிள்ளைக்கு பலவித தட்டுகள் நிறைய பண்டங்கள் வைக்கப்பட்டு இருந்தாலும் அவருக்கு கொழுக்கட்டை மீது ஒரு கண். கொழுக்கட்டையை சாப்பிட சாப்பிட அவருக்கு கொழுக்கட்டை மீதான பிரியம் அதிகரித்து விட்டது. உடனே மாமியாரிடம் இது நன்றாக இருக்கிறதே எனச் சொன்னவுடன், மாமியார் என்னுடைய மகளுக்கு கொழுக்கட்டை அவிக்க தெரியும் என சொல்கிறார். அந்த மாப்பிள்ளை உடனே இந்த பண்டத்தின் பெயர் என்ன என்று கேட்டு கொழுக்கட்டை என உறுதிபடுத்திக் கொண்டு வீட்டை நோக்கி செல்கிறார். கொழுக்கட்டை என்ற பெயர் மறந்து விடக்கூடாது என்பதற்காக கொழுக்கட்டை கொழுக்கட்டை எனச் சொல்லிக் கொண்டே செல்கிறார். ஊருக்கு போகும் வழியில் ஒரு சாக்கடை ஓடுகிறது. அதனைத் தாண்டிய போது சட்டை வேட்டி அழுக்காகி விடக்கூடாது என மனதில் சொல்லிக்கொண்டே தாண்டுகிறார். ஒருவழியாக தாண்டி முடித்தவுடன் கொழுக்கட்டை என்ற சொல் மறந்து விட்டது. உடனே அந்திரிபச்சா என்ற சொல் தோன்றிவிட்டது. அந்திரி பச்சா, அந்திரி பச்சா எனச் சொல்லிக் கொண்டே அவர் வீட்டை நோக்கி நடக்கிறார். அவர் மனைவியிடம் சென்று எனக்கு அந்திரி பச்சா செய்து கொடு, எனக்கு அந்திரி பச்சா செய்து கொடு என விடாமல் கேட்கிறார். அவளுக்கோ அந்திரி பச்சா என்றால் என்னவென்று தெரியவில்லை. உங்க அம்மா செய்து கொடுத்தார்கள் சுவையாக இருந்தது எனச் சொல்லி அவர் மீண்டும் மீண்டும் கேட்கவும் அவர் மனைவிக்கு கோபம் அதிகமாகிவிட்டது. உடனே ஒரு உருட்டுக் கட்டையை எடுத்து தலையில் ஒரு பேடு போட்டு விடுகிறார். அப்போது அவரைப் பார்க்க வந்த பெண் ஒருத்தி என்ன கொழுக்கட்டை மாதிரி தலை வீங்கியிருக்கிறது எனக் கேட்கவும். ஆமா கொழுக்கட்டை தான் அது எனக்கு செய்து கொடு. அதைத்தான் இத்தனை நாட்கள் கேட்டேன் என்று சொல்வதாக கதை முடியும். கொழுக்கட்டை அந்திரிபச்சா ஆனது போல தர்மசீலன் அமிர்தலிங்கமாக மாறி மீண்டும் தர்மசீலனாக மாறும் விந்தை முதல் ஐம்பது நாட்களில் நடந்தது. இதில் ஆழ்ந்து பார்க்க வேண்டியது என்னவென்றால் சந்திரமுகியில் உன் மனைவி தன்னை சந்திரமுதியாகவே நம்புகிறாள் எனச் சொல்லும் வசனம் வருவது போல தர்மசீலனும் தன்னை அமிர்தலிங்கமாகவே நம்பினார். கொழுக்கட்டை கதை சொல்லவும் தான் நினைவுக்கு வருகிறது. இந்த எண்பது நாட்களின் கடைசி பத்து நாட்களுக்குள்ளான ஒரு நாளில் தர்மசீலன் தான் பார்க்கக்கூடிய எல்லா ஆசிரியர்களிடமும் சொன்ன ஒரு கதை தான் மண்ணாங்கட்டி கதை. அவருடைய அந்த மண்ணாங்கட்டி கதைக்கு என கல்லூரியில் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. செயலாற்றுவோர் செய்விக்கப்பட்ட விதத்தை சொல்ல வேண்டிய இடத்திற்குள் என்னையும் மீறி ஒரு கதை உட்புகுந்து விட்டது. ஆனாலும் நான் செய்விக்கப்படும் விதத்தைக் குறித்து சொல்ல வேண்டும் என்பதில் நினைவோடு இருக்கிறேன். ஒன்பதாம் வகுப்பிற்கு பயிற்சிக்காக செல்லும் தர்மசீலனீன் அதிகபட்ச அன்றாட நடவடிக்கை என்பது மீண்டும் அவருக்கென ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைக்கு திரும்பி வருவதே. ஒதுக்கப்பட்ட அறையைப் பற்றி சில தகவல்களை இங்கு இணைக்காமல் சென்றால் நன்றாக இருக்காது. பயிற்சிக்கு சென்ற மாந்தர்களுக்கான இருப்பிடமாக ஒதுக்கப்பட்ட அறையில் அவர்கள் மட்டும் இருக்கவில்லை. அவர்களுக்கு துணையாக ஒரு எதிரிக்கூட்டமும் அங்கேயே வசித்தது. அது எத்தனை காலம் அங்கு இருக்கிறது என்பது மேலே சொல்லப்பட்ட மாந்தர்கள் எவருக்கும் தெரியாது. அந்த எதிரிக்கூட்டத்தின் மூலம் சந்துரு, அருள்ரூபனைத் தவிர ஏனையோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாவது சங்கர் தனது பைக்குள் வாழைப்பழத்தை வைத்திருந்ததால் தாக்கப்பட்டார். இரண்டாவதாக தர்மசீலன் தான் திண்பதற்காக கொண்டு வந்த கடலைப் பக்கடாவிற்காக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். மூன்றாவதாக கார்த்திக் ராஜாவும் அழகுராஜூம் மதிய உணவிற்கு வாங்கி வைத்த சமோசா ஒன்று அந்த எதிரிகள் மூலம் பறிக்கப்பட்டது. இந்த மூன்று சம்பவங்கள் மூலம் அந்த எதிரியின் பிரதானமான நோக்கம் சாப்பிடும் பொருளுக்காக சமரசமின்றி போரிடுவது என்பது உங்களுக்கு தெளிவாகி இருக்கும். இப்போது அந்த எதிரிகளின் பெயரினை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்‌. அவர்களின் பொதுப் பெயர் எலிக்கூட்டம். ஆம், சங்கர் மற்றும் தர்மசீலனீன் பைகளில் துளையிடும் போர் முறையைக் கையாண்டு ஓட்டை போட்ட எலிக்கூட்டத்தோடு தான் நாங்கள் நான்கு மாதங்கள் இருந்தோம். தர்மசீலனை பற்றி இவ்வளவு தூரம் சொல்லிவிட்டு அவரது உயிரை அவ்வப்போது கொடுத்து வாங்கும் அவரது நண்பர் சந்துருவைப் பற்றி சொல்லவில்லை என்றால் அவர் கோபித்துக் கொள்வார். சந்துருவைக் குறித்து சொல்வதற்கு முன் அதற்கு அடுத்த சில நாட்கள் என்ன நடந்தது என்பதைக் குறித்து சொல்லிவிடுகிறேன்.

      வழிகாட்டி ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்ட பின்பு எல்லோரும் மறுநாள் காலையில் தங்களுடைய வழிகாட்டி ஆசிரியர்களிடம் பாடவேளை அட்டவணையை வாங்கிக் கொண்டனர். ரூபன் மட்டும் வேறு பள்ளிக்கு செல்லலாமா? என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். சங்கருக்கோ எப்படி நாம் இவர்களிடம் இந்த பயிற்சிக்கு வராமல் வந்ததுபோல் காட்டிக் கொள்வது என்பதில் தீவிரமாக இருந்தார். மேலும் அதற்காக சிலரை அணுகவும் செய்தார். சங்கர் தனது தம்பி ஒருவர் மூலம் அறிமுகமான ஒருவரை வைத்து காய் நகர்த்த திட்டமிட்டு அவரிடம் பேசிய போது அவர் வீராப்பாக நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதை சங்கரும் உள்ளூர நம்பிவிட்டார். அடுத்த சில நாட்களில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னவருடைய வீராப்பு காணாமல் போனதோடு சங்கரை பார்க்கும் போதெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டார் அந்த நல்ல மனிதர். இப்போது வழிகாட்டி ஆசிரியர்கள் ஒதுக்கீடு பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். சங்கர், கார்த்திக் ராஜாவைத் தவிர மீதியானோர் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வழிகாட்டிகளை சந்தித்துக் கொண்டனர். ஒரு வழிகாட்டியுடன் அறிமுகமாகி இருந்த கார்த்திக் ராஜாவும் இரண்டு நாட்களுக்கு பிறகு மற்றொரு வழிகாட்டியோடு ஐக்கியமானது மட்டுமன்றி பயிற்சி முடித்து வரும்போது அவரை ஏங்க வைக்குமளவு நடந்து கொண்டதெல்லாம் தனிக்கதை. சங்கர் தனக்கான இரண்டாவது வழிகாட்டியை கண்டடைந்தது பயிற்சி முடிய இருந்த கடைசி வாரத்தில் தான். அதுவரை அழகுராஜ் மற்றும் கார்த்திக் ராஜா போய் மற்றொரு வழிகாட்டி யார் என்பதை கேளுங்கள் எனச் சொன்னபோதெல்லாம் அவர் முழு சோம்பேறியாகவே காணப்பட்டார். 

     இப்போது செய்ய வேண்டிய செய்த செயல்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். மேலேயுள்ள மாந்தர்கள் பயிற்சிக்கு சென்ற காலம் முதல் இடைப் பருவத் தேர்வு காலம். தேர்வு என்றால் அது நடத்தப்படுவதற்கு முன்பும் நடத்தப்பட்ட பின்பம்  சில பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உண்டு. அந்த பணிகளுக்காக இந்த மாந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். கேள்வித்தாளை எண்ணுவது வருகைப் பதிவு தாள்களில் அறை எண் மற்றும் வரிசை எண்களை சரிபார்த்து மொத்தம் எத்தனை பேர் ஒரு அறையில் தேர்வு எழுதுகின்றனர் என்பதை கணக்கிடுவது போன்ற ஏகப்பட்ட பணிகள் உண்டு. கையெழுத்து அழகாக இருப்பதால் எழுத்துப் பணிகள் எல்லாம் கார்த்திக் ராஜா தலைமீதே விழும். எப்போதாவது நேரம் போகவில்லை என்றால் மட்டும் தர்மசீலனும் எழுத்துப் பணியில் ஈடுபடுவார். ஒருமுறை தர்மசீலனை சின்ன பிள்ளை போல எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்லி விட்டனர். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அழகுராஜையும் அதேபோல சொல்லியதுண்டு. இருந்தாலும் சந்துரு மற்றும் சங்கர் கொடுக்கும் தன்னம்பிக்கையால் அதிக உற்சாகம் அடைந்து தர்மசீலன் எழுத்துப் பணிகளில் ஈடுபடுவது உண்டு. தேர்வுக்கு முந்தைய ஆயத்தங்கள் பற்றிய சில காரியங்கள் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அதிகமான சில நுணுக்கங்களையும் வேகத்தையும் தன்னிடம் கொண்டிருந்தவர் சங்கர். இந்த தேர்வுப் பணிகள் நடந்து கொண்டிருந்த நாட்களில் தான் எல்லோரிடையும் ஒரு ஆச்சரியம் தோன்றியது. சந்துரு என்ன செய்தார் எனத் தெரியவில்லை. சென்றிருந்த பள்ளியில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒரு ஆசிரியர் ஒருவர் பயிற்சி முடியும் வரை அடிக்கடி சத்துரு தலைமையில் நன்றாக இயங்குகிறீர்கள் என்று சொல்வார். சந்துரு என்று சொல்வது சும்மா தான் எல்லாருமே நன்றாக வேலை பார்க்கின்றீர்கள் என அவர் சொல்வதும் உண்டு. இதைப்பற்றி சந்துருவிடம் சங்கரும் அழகுராஜூம் கேட்டால் அவருக்கு என் பெயர் மட்டும் தான் தெரியும். அதனால் சொல்கிறார் என மழுப்பிவிடுவார். இந்த சம்பவத்தை தர்மசீலன் கேலி செய்துமிருக்கிறார். தேர்வுக் காலம் குறித்து சொல்லும் போது இடையில் இத்தனை சம்பவங்கள் வந்துவிடுகிறது. கேள்வித்தாள்களை எண்ணுவதோடு நில்லாமல், காலாண்டுத் தேர்வு காலங்களில் அதன் தொடர்ச்சியான சில பணிகளை மேற்கொள்ள வேண்டியதும் இருந்தது. எல்லா தேர்வறைகளுக்கும் முதல் நாளே சென்று தேர்வு எண் எழுதுவது, தேர்வின் போது கேள்வித் தாள்கள் சரியாக இருக்கிறதா என கேட்பது, வருகைப் பதிவு தாள்களை சேகரிப்பது, ஏதேனும் கேள்விகள் மாறி இருந்தால் அதற்கான சந்தேகத்தை அந்தந்த பாட ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி சந்தேகத்தை போக்குவது, கணிதம் முதலான பாடங்களில் கேள்வியை மாற்ற வேண்டுமென்றால் தேர்வு அறைகளுக்கெல்லாம் சென்று மாற்று கேள்வியை எழுதுவது போன்ற செயல்பாடுகள் எல்லாம் இதில் அடக்கம். தேர்வு முடிந்த பிறகு பாடவாரியாக விடைத்தாள்களை அறைக் கண்காணிப்பாளர்களிடம் இருந்து பிரித்து வாங்கி வகுப்பு வாரியாக அடுக்கி எண்ணி தாள்களை கட்டுவது அடுத்த பணி. வகுப்பு வாரியாக வாங்கும் போது வரிசையாக அறைகளின் எண்களை மையமாக வைத்து அடுக்கிப் பிரிக்க வேண்டும். சந்துரு தர்மசீலன், சங்கர் அழகுராஜ் எனப் பிரிந்து சென்று கரும்பலகையிலும் மேசைகளிலும் தேர்வு எண்களை எழுதினார்கள். இப்படியான தேர்வுப் பணிகளுக்கு பின்னான நடவடிக்கை ஆண்டாய்வு தொடர்பான செயல்பாடுகளே. தர்மசீலன் தான் ஆண்டாய்வுக்கு அதிகம் உழைத்தவர். வண்ண அட்டைகளில் தன் கைவண்ணத்தை காட்டி அவரது வழிகாட்டி ஆசிரியர்களை ஈர்த்ததோடு நான்கு நாட்கள் தனக்கு அதிகம் வேலை இருக்கிறது என்பது போல காட்டிக்கொண்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அழகாக எழுதி இருந்தார். இதை இந்த இடத்தில் பதிவு செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இப்படிச் சொன்னாலாவது இதை எழுதிக் கொண்டிருப்பவருக்கு தர்மசீலன் வண்ண அட்டைகளில் எழுதித் தருவார் என்கிற நப்பாசையில் தான் அப்படி சொல்லப்படுகிறது. ஆண்டாய்வு நாளில் ஆளுக்கொரு மூலை ஒதுக்கப்பட்டு அங்கு நாற்காலிகள் வைக்கப்பட்டன. மேலே கூறப்பட்ட மாந்தர்கள் அன்றைய நாளில் மதிய உணவு கொண்டு வரவேண்டாம் என்று ஏற்கனவே சொன்னதன் பேரில் அவர்கள் மதிய உணவு கொண்டு போகவில்லை. நேரத்திற்கு அவர்கள் இருந்த இடத்திற்கே தேனீர் வந்துவிட்டது. மதிய உணவும் அன்று பள்ளியின் மூலம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

      மேலேயுள்ள மாந்தர்கள் பள்ளிக்கு போனதில் முக்கியமாக செய்ய வேண்டியது பாடம் கற்பித்தலே. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தொடக்கத்தைக் கொண்டதாகும். அழகுராஜ் திடீரென வகுப்பிற்கு போன ஒருநாளில் எவ்வித ஆயத்தமும் இல்லாமல் திருக்குறள் நடத்த தொடங்கியது மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சிலர் தங்களுக்கென சில பகுதிகளை நடத்துவதற்கு கேட்டு வாங்கியதும் உண்டு. அனைவரும் தன்னளவில் மனப்பூர்வமாக பாடத்தை தயார் செய்து வகுப்பில் போய் நடத்தினர்‌. பாடம் நடத்தும் போது எல்லோருடைய குரலும் தெளிவாக வெளியில் கேட்கும் அளவுக்கான சூழல் இருந்தது. ஆரம்பத்தில் பள்ளியில் எந்த வகுப்பு எதற்குள் இருக்கிறது என தங்களுக்குள் நொந்து கொண்டவர்களுக்கு கொஞ்ச நாட்களுக்குப் பின் எல்லா கீழ் நிலை வகுப்பும் அறிமுகம் ஆனது. இந்த வகுப்புகளை எல்லாம் அனைவருக்கும் காட்டியவர் சந்துரு. சந்துரு தான் முதன் முதலாக கண்ணாடி, டெரிஸ்கோப் என்று கற்பித்தலுக்கான துணைக் கருவிகளை கையில் எடுத்து திரிந்து கொண்டிருந்தார். சந்துருவும் தர்மசீலனும் அறிவியல் பாடம் என்பதால் ஆளுக்கு ஒரு பாடத்தைப் பற்றிய தகவல்களை சேகரித்து வந்து தங்களுக்குள் பரிமாறிக் கொண்டே வகுப்புகளுக்குள் செல்வர்‌. இருவரிடையிலும் நல்ல கூட்டுழைப்பு இருந்தது. ஆனால் மதிய உணவு நேரத்தில் இருவரும் காணாமல் போய் விடுவர். இப்போது உணவைப் பற்றிய சில செய்திகளைச் சொல்கிறேன். மேலேயுள்ள மாந்தர்களில் பள்ளிக்கூடச் சாப்பாட்டை ஓரிரு முறை வாங்கிச் சாப்பிட்டவராக அழகுராஜை மட்டுமே கூற முடியும். மாணவர்களால் உணவு கொடுக்கப்பட்டு உபசரிக்கப்பட்டவராக கார்த்திக் ராஜா இருந்ததையும் குறிப்பிட வேண்டும். மற்றபடி சங்கரின் கருவாட்டு குழம்பு, சந்துரு கொடுத்த சேமியா உப்புமா, இட்லி முதலானவை விசேஷித்தவை. கடைசி நாளில் சங்கர் அழகுராஜ்க்கு சட்னி வைத்தும் சட்னி வைக்காமலும் இட்லி ஊட்டியதை இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும். 

      மேலேயுள்ளவர்களில் வேகமாக வகுப்பிற்கு செல்லக்கூடியது கார்த்திக் ராஜா தான். மற்றவர்களும் சரியான நேரத்திற்குள் சென்றாலும் கார்த்திக் ராஜா தனித்து தெரியும் ஓர் இடமாக இது உள்ளது. தினமும் தர்மசீலனும் சந்துருவும் காலையில் தம்பி வந்துவிட்டானா ஆளைக் காணும் எனக் கேட்காத நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கண்வலி பரவிய காலக்கட்டத்தில் சங்கர், சந்துரு, தர்மசீலன், கார்த்திக் ராஜா ஆகியோர் வரிசையாக பாதிக்கப்பட்டனர். அழகுராஜ் மற்றும் அருள்ரூபன் கண்வலியால் பாதிக்கப்படவில்லை. இவர்களெல்லாம் கண்வலியால் பாதிக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒருவர் சசிகுமார். அவரால் தான் இவர்கள் நால்வருக்கும் கண்வலி வரிசையாக ஒருவர் விட்டு ஒருவர் பரவியது என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த இடத்தில் சசிகுமார் உடனான மேலேயுள்ள மாந்தர்களின் உறவைப் பற்றி கூறுதல் அவசியம். மேலேயுள்ள மாந்தர்கள் அனைவருக்கும் அண்ணனாகவும் தம்பியாகவும் இருந்தவர் தான் சசிகுமார். வரக்கூடிய நாட்களில் மேலேயுள்ள மாந்தர்களுக்கான நடன பயிற்றுநராகவும் அவர் பொறுப்பேற்க இருக்கிறார். அவரை அதிகம் பயமுறுத்தியது அழகுராஜ் தான். ஒருமுறை படியிலிருந்து அவர் இறங்கும் போது அழகுராஜ் மாணவர்களை அழைத்த சத்தத்தை எண்ணி அவர் திடுக்கிட்டு விட்டார். கார்த்திக் ராஜாவும் சசிகுமாரும் எஸ்.ஆர்.எம். பார்ட்னர்ஸ். எதற்கு தினமும் எஸ்.ஆர்.எம் பேருந்தில் இருவரும் வந்தனர் என்பது சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. பேருந்தை ஓயாத பேச்சின் மூலம் ஓடவைத்தவர்களே இவர்கள் இருவர் தான். ஓயாத பேச்சு என்று சொல்லும் போது ஒருவரை மறவாமல் குறிப்பிட்டாக வேண்டும். இவரது ஓயாத பேச்சின் தொடக்கமே எங்கேயாவது போவோமா என்பதாகவே இருக்கும். ஓயாத பேச்சு மூலம் அதிகம் இம்சிக்கப்பட்டவர் தர்மசீலன் மட்டும் தான். அதற்கான காரணம் அவர் எல்லா ரிகார்டு நோட்டுகளையும் எழுதி கையெழுத்து வாங்கியதே. கடைசி நாளுக்கு முந்தைய மூன்று நாட்களில் தர்மசீலன் அழகுராஜுடைய ஓயாத பேச்சின் மூலம் அதிகம் அச்சுறுத்தப்பட்டார். சங்கர் பல மாயாவி கதைகளை எல்லாருக்கும் கூறுவார். அதில் அமானுஷ்யங்கள் இல்லாமல் இருந்ததே இல்லை. அதற்கு அப்படியே எதிர் மாறாக சந்துரு அரசியலை நோண்டிக் கொண்டு இருப்பார். அருள் ரூபனும் தர்மசீலனும் காதில் ஹெட்போனை சொருகி பாட்டு கேட்டுக்கொண்டிருப்பார்கள். மேலே கூறப்பட்ட மாந்தர்களில் நான்கு பேர் பிற நண்பர்களோடு சேர்ந்து ஆடிய நடனம் போன்ற காட்சிகள் சங்கருக்கு வாழ்க்கையில் பெரிய உத்வேகம் கொடுத்துள்ளது. ஆரம்ப வாரங்களில் வெள்ளிக்கிழமை வந்தால் இரண்டு நாட்கள் விடுமுறை என சிரிக்கும் சங்கர் பிற்காலத்தில் வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதை நடனமாடி கொண்டாட அவர்களுடைய நடனம் ஏற்படுத்திய உந்துதல் கூட காரணமாக இருக்கலாம். சசிகுமார் ஒரு நடன கலைஞர் என்றாலும் இவர்கள் கூட எப்படியாவது ஆடிவிட வேண்டும் என்கிற வெறி பிடித்து காணப்படுகிறார். அவரும் மேலே குறிப்பிட்ட மாந்தர்களின் நடனத்தால் கவரப்பட்டவரே. வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும் காலத்தில் பார்க்க வேண்டிய வாழ்க்கையை மாற்றக்கூடிய கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என சில படங்களைச் சொல்வார்கள் அதற்குள் அடங்கக்கூடியது இவர்கள் ஆடிய ஆட்டம்.

      மதியம் ஆனால் சங்கர் தூங்கிவிடுவார். அழகுராஜும் தூங்குவது உண்டு. சசிகுமார் அந்த பக்கம் வந்தால் யாருக்கும் தெரியாமல் படம் பிடித்து அதைக் குழுவில் போட்டு ஒரு கலவரத்தை உண்டு பண்ணிவிடுவார். சங்கர் இந்த பயிற்சியில் ஒரு விஷயத்தை கேட்பதற்கும் சொல்வதற்கும் மறந்துவிட்டார். ஒன்று ஒரு பாடவேளையில் ஐம்பதுக்கும் அதிகமான பக்கங்களை எப்படி நடத்துவது? மற்றொன்று நீங்கள் இனிமேல் என்னைப் பார்த்து பயப்பட்டு ஓட வேண்டாம் எனக்கு பயிற்சி முடிந்துவிட்டது என்ற வார்த்தைகள். இது இரண்டு நபர்களிடம் மொழியப்பட வேண்டியவை. சந்துரு இருந்ததால் மதிய உணவிற்கு குறை இருந்ததே இல்லை. ஆனால் தனியாக விட்டு விட்டு போலியும், அண்ணாச்சி பழமும் அவர்கள் தின்றது மன்னிக்க முடியாத குற்றம். அதனால் தான் பஜார் படிக்கட்டுக்கருகில் தர்மசீலனின் சட்டையைப் பிடித்து பத்து ரூபாயை அன்றொருநாள் பறிமுதல் செய்தனர். சங்கரும் அழகுராஜும் இனிமேல் ஒன்றாக ஊர் சுற்றுவதும் ப்ளாக் காபியும் டீயும் குடிப்பதும் எப்போது என தெரியவில்லை. மேலேயுள்ள மாந்தர்களோடு பூவரசகுமாரும் விக்னேஷும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எண்பது நாட்களுக்கான செயல்பாடுகளையும் எழுத ஆசை தான். ஆனால் அதற்கான குறிப்புகள் இல்லை. குறிப்புகள் என்றவுடன் டைரி தான் நினைவுக்கு வரும். சங்கரிடம் ஒரு டைரி உண்டு. அதில் தான் பாடம் சார்ந்த சாராத தகவல்கள் எழுதப்பட்டு இருக்கும். அதேபோன்ற டைரியை மேலேயுள்ள மாந்தர்கள் எல்லோருக்கும் தருவதாக சொல்லி இருந்தார். சொன்னது போல கொடுக்கவும் செய்தார். கொஞ்சம் முன்னாலேயே அந்த டைரியை கொடுத்திருந்தால் இதை எழுதிக்கொண்டிருப்பவர் நாட்குறிப்புகளை எழுதி வைத்து தெளிவாக அனுபவத்தை எழுதியிருப்பாரா எனத் தெரியவில்லை. 

     மதிய நேர ஸ்டடி, மாலை நேர ஸ்டடி, தேர்வு, பாடம் என்று நாட்கள் கடகடவென ஓடி முடிந்திருக்கிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மழை பெய்கிறது. மழை பெய்ததால் தான் டிசம்பர் இரண்டாம் தேதி நிறைவாக இருந்த பயிற்சி ஐந்தாம் நாளில் நிறைவாகியுள்ளது. கடைசி நாளில் பேனா, புத்தகம், பின்னூட்ட கடிதங்கள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றோடு பள்ளியை விட்டு மேலே கூறிய மாந்தர்கள் வாழ்த்துகள் பெற்று திரும்பினர். இனிமேல் கார்த்திக் ராஜாவும் தர்மசீலனும் பள்ளியால் தேடப்படுவார்கள். சசிகுமார் தனியாக எஸ். ஆர். எம். பேருந்தில் பயணிப்பார். சங்கர் காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை ஏதாவது ஒரு வேலைக்காக தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார். அழகுராஜ் எழுத வேண்டிய ரிகார்டு நோட்டுகள் அதிகம் இருப்பதால் எழுத தொடங்குவார் என எதிர்பார்க்கலாம். தர்மசீலனுக்கும் கார்த்திக் ராஜாவுக்கும் அதிகம் கவலையில்லை அவர்கள் கையெழுத்து வாங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக தர்மசீலன் அழகுராஜ் கொடுத்த தொந்தரவை மீறி கையெழுத்து வாங்கி விட்டார். எப்படியோ சந்துருவின் தலைமையில் பயிற்சி நிறைவடைந்து விட்டது. ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் சார்பாக அல்வா, சேவு, டீ, பேனா கொடுத்து வழியனுப்பினார்கள். இந்த நற்பேறு பயிற்சிக்கு சென்ற மாணவ ஆசிரியர்கள் எவருக்கேனும் நடந்திருக்குமா எனத் தெரியவில்லை. செவ்வாய்க்கிழமை நாளைக்கு கல்லூரிக்கு போகாதீர்கள், புதன்கிழமை போக வேண்டியது தானே என்று சங்கர் சொன்னார். நாம் பள்ளிக்கு செனறதே செவ்வாய்க்கிழமை தான். அதேபோல கல்லூரிக்கும் செல்வோம். நாளை கல்லூரிக்கு செல்கிறோம்.

- அழகுராஜ்

   05.12.2022, இரவு




 













Comments

Popular posts from this blog

வராகா நதிக்கரையோரம் - அழகுராஜ்